தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.

அதிரடி மச்சான் கார்னர்:

மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”

என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா? அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே?

நான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:

ஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.

எ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே!

தர்ம அடி கார்னர்:

மெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”

எ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

ஏழையின் சிரிப்பில் கார்னர்:

ஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”

எ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி! என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவாதிக்கக் கூடாதா?

கேனத்தனமான கேள்வி கார்னர்

விவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா? நல்ல நாடா? ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’

எ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா? இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦

டீச்சர்! இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:

மெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”

எ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது?

ஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:

ஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது? முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”

எ.க.: சாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா?

ஆடை பாதி கார்னர்:

ஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.

எ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா?

டாக்சி! டாக்சி! (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:

மெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.

எ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’

கம்ப்யூட்டர் கார்னர்:

ஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”

எ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂

என் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:

மகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து குதிக்கும்?

ஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே?

ஒருவரியில் எ.க. கார்னர்:

‘டாம்! டாம்! ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்!’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா

‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்!’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)

மெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)

குற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா

தர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்

இருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!