அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I
அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: II
5.பொய் சொல்லப் போறோம்
மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் குறைகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சில அரசு அதிகாரிகளுமே மக்களை குழப்பிவிடும் விஷமத்தனத்தைச் செய்யும் வழக்கமும் கிட்டத்தட்ட அண்மைய தேர்தல்கள் அனைத்திலும் தலைதூக்குகின்றன. 2008 தேர்தலில் ஏற்கனவே கறுப்பின நிறுபான்மையினர் வாழும் பல பகுதிகளில் வாக்களிக்கச் செல்பவர்கள் Parking Violations உட்பட்ட சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களாயின் கைது செய்யப்படுவார்கள் என துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில இடங்களில் துண்டு பிரசுரங்களில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாயிருப்பதனால் இந்த வருடம் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமையும் டெமக்ராட்டிக் கட்சிக்காரர்களுக்கு புதன்கிழமையும் தேர்தல்கள் நடக்க இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
சில மாவட்டங்களில் அரசு அதிகாரிகளே மக்களை குழப்பும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். காலராடோவில் வெளி மாநில மாணவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யக் கூடாது என அதிகாரி ஒருவர் தவறாக அறிக்கை ஒன்றை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மின்னஞ்சல்கள் மூலமும் இத்தகைய தவறான செய்திகள் வாக்குப் பதிவை குறைக்கும் வகையில் பரப்பப்படுகின்றன. இவை குறிப்பாக ஊடகங்களை கவனிக்காத அடித்தட்டு மக்களை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரங்களாகும்.
முறையற்ற வாக்காளர் பதிவு டெமெக்ராட்டிக் கட்சிக்கு எதிரான வாதமாகவும், வாக்காளர்களை பயமுறுத்தி அல்லது திசை திருப்பி வாக்களிக்க விடாமல் செய்வதை ரிப்பப்ளிக்கன் கட்சிக்கு எதிரான வாதமாகவும் எப்போதும் வைக்கப்படுகிறது.
அஞ்சல் வழியே வாக்குகளை அனுப்பும் முறயிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. 2000ம் ஆண்டு தேர்தலில் ஒகையோ மகாணம் எல்லா வாக்குகளையும் அஞ்சல் வழியே பெற்றது இது பெரும்பான்மை வாக்குகள் வருவதை ஊக்குவித்தது(80%). இருப்பினும் பலரும் தங்கள் வாக்குச் சீட்டை வீட்டில் இருந்த வேறொருவர் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறையில் வீட்டில் பலமுள்ளவர்கள் பிறரை தங்கள் விருப்பத்திற்கேர்ப்ப வாக்களிக்கச் செய்யும் வாய்ப்பும் உள்ளது.
டெக்சாசில் அஞ்சல் வழி வாக்குகளைப் பெற சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிலர் காசு கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பல கல்லூரி மாணவர்களும் தாங்கள் அஞ்சல்வழி ஒரு மாநிலத்திலும், நேரடியாக இன்னொன்றிலும் இருமுறை வாக்களித்ததாகக் கூறியுள்ளனர்.
ஜனநாயகம் ஒரு சமரச அமைப்பு என்பதை தேர்தல் முறைகேடுகளும், குழப்படிக்கும் சட்டங்களும் மேலும் வலியுறுத்துகின்றன. அமெரிக்க தேர்தல் முறையில் இன்னும் பல மாற்றங்களும் செய்யப்படவேண்டும் என்பதும் இது காலத்திற்கேற்ப செப்பனிடப்பட வேண்டிய அமைப்பு என்பதும் இங்குள்ள பல அரசியல் பண்டிதர்களின் கருத்துமாகும்.
பல மகாணங்களிலும் இழுபறி நிலையில் கணிப்புகள் இருக்கும் 2008 தேர்தலில் முன்பில்லாத வகையில் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்திருக்கும் நிலையில் குழப்பம் மிகுந்த அமெரிக்க தேர்தல் முறை நிறைவான முடிவைத் தருமா இல்லை சந்தேகங்களுடன் நிறைவு பெறுமா என்பதற்கு நாளை விடை கிடைக்கலாம்.
===
நன்றி: டைம், விக்கிபீடியா, http://findarticles.com/
Filed under: கருத்து, செய்தி, தகவல், பொது | Tagged: அமெரிக்கா, அரசியல், ஜனநாயகம், முறைகேடுகள் | 2 Comments »