முதல் தடவையாக ஓபாமா & ஹில்லாரி ஒரே குரலில்

ஓபாமா ஹிலாரி ஒன்றாகமுதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.

“If you think we need a new course, a new agenda, then vote for Barack Obama and you will get the change you need,” she told the cheering crowd.

“He will work for you, he will fight for you and he will stand up for you every day in the White House.”

இதேவேளை ஒபாமா, கிளின்டனின் முன்னய தேர்தல் பிரச்சார கடன்களையும் அடைத்துள்ளார்.

இதன் மூலம் ப்ரைமரியில் பிரிந்திருந்த டெமொகிரட்டிக் ஆதரவாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

ஜான் மெகெயின் கருத்துப் படங்கள்: பாஸ்டன் க்ளோப்

நன்றி: Boston.com – Opinion – Globe: “Daniel Wasserman :: Globe cartoonist”

ஒபாமாவின் iPodல் என்ன இருக்கிறது?

அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு அரசு பண உதவி செய்யும். அப்படி அரசு நிதி உதவியைப் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவிட முடியும். தாங்கள் தனியே திரட்டிய நிதியை திருப்பித் தந்துவிடவும் வேண்டும்.

ஒபாமா உட்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுக்கிடையேயான விவாதமொன்றில் ‘யாரெல்லாம் அரசின் பிரச்சார பண உதவியைப் பெறப் போகிறீர்கள்?’ எனும் கேள்விக்கு கையைத் தூக்கினார். அண்மையில் அரசின் உதவியை நாடப் போவதில்லை என அறிவித்து தன் முந்தைய நிலையிலிருந்து மாறிவிட்டார்.

ஒபாமாவின் இந்த மனமாற்றத்திற்கு காரணமாக அவர் கூறியிருப்பது மெக் கெயினுக்கு இருக்கும் 527 குழுக்களின் ஆதரவுகள். 527 குழுக்கள் ஒரு வேட்பாளரின் பிரச்சார அமைப்புடன் நேரடித் தொடர்பில்லாதவை ஆனால் அந்த வேட்பாளருக்கு ஆதரவாகத் தன்முனைப்பில் பிரச்சாரம் செய்பவை. அமெரிக்க வரி விதிப்பு சட்டத்தின் 527ஆம் பகுதியில் இத்தகைய குழுக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பரவலாக இவை ‘லாபியிஸ்ட்’களால் நடத்தப்படுகின்றன. லாபியிஸ்ட்டுகள் தங்களுக்கு சாதகமான அரசியல் முடிவுகளைப் பெற அரசியல் வட்டங்களில் முயற்சி செய்பவர்கள். ஒபாமாவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வாஷிங்டன்னில் லாபியிஸ்ட்டுகளின் தாக்கத்தை குறைப்பதும் உள்ளது. ஒபாமா பரிந்துரைக்கும் புதிய அரசியலின் முக்கிய பாகம் இது.

குடியரசுக் கட்சிக்கு லாபியிஸ்ட்களின் ஆதரவு அதிகம் உள்ளது. குறிப்பாக மெக் கெய்னின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்குவகிப்பவர்கள் சிலர் முன்னாள் லாபியிஸ்ட்டுகள். ஒபாமா இத்தகைய லாபியிஸ்ட்டுகளின் தலையீட்டல் 527 குழுக்கள் தனக்கெதிராக பிரச்சாரங்களை – ஊடக விளம்பரங்கள் மூலம்- கிளப்பிவிடும் எனப் பயப்படுவதால் பொதுத் தேர்தல் நிதியிலிருந்து பணம் பெறப் போவதில்லை என அறிவித்துள்ளார். அதாவது 527 குழுக்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தனக்கு அரசு நிதி தரும் $85மில்லியன்கள் போதாது என்கிறார்.

மிகச்சாதாரண அரசியல் முடிவாகத் தோன்றும் இந்த முடிவு ஒபாமாவுக்கு பாதகமான முடிவாக அமைந்துள்ளது.

முதலில் முன்பு பொதுத் தேர்தல் நிதியை பயன்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டு தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அவரின் நேர்மையை சந்தேகிக்கச் செய்துள்ளது.

இரண்டாவதாக ஒபாமாவின் பணம் காய்க்கும் மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. 2007 ஜனவரி துவங்கி இன்று வரை ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு $272 மில்லியன்கள் நன்கொடை கிடைத்துள்ளது.- இதில் கணிசமான தொகை இணையத் தளம் வழியே பெறப்பட்டது. – எனவே ஒபாமா தன் பிரச்சாரத்தின் உறுதியற்ற துவக்க நிலையில் பொது நிதியை பெற சம்மதித்தும் தன் நிலை உறுதிப்பட்டதும் நிலையை மாற்றிக்கொண்டும் ஒரு ‘சாதாரண அரசியல்வாதியாகவே’ காணப்படுகிறார் என்றும் அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் ‘புதிய அரசியல்’ என்பது பொய்யானது என்றும் பார்க்கப்படுகிறது. ஜான் மெக்கெய்ன் இதுவரை மொத்தம் $100 மில்லியன்தான் நன்கொடை பெற்றுள்ளார்.
மூன்றாவதாக 527 குழுக்கள் எதுவுமே இதுவரை ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரம் ஆரம்பித்துவிடவில்லை. ஆனால் Moveon.org போன்ற இடதுசாரி குழுக்கள் மெக் கெய்னுக்கு எதிராக விளம்ப்பரங்களை வெளியிட்டுள்ளன. – ஒபாமா இத்தகைய விளம்பரங்களை மறுதலிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.- ஆக எதிர்காலத்தில் நடைபெறலாம் எனும் யூகத்தின் பேரில் ஒபாமாவின் முடிவு இருப்பதால் நம்பகத்தன்மை குறைகிறது.

1976ல் தேர்தல் பொது நிதி உருவாக்கப்பட்டபின்பு அதை வேண்டாம் எனத் தள்ளும் முதல் முக்கிய வேட்பாளர் ஒபாமா மட்டுமே.

மெக்கெய்னுக்கு இந்த வாரத் தலைவலி அவரது பிரச்சாரக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் பேட்டி ஒன்றில் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாத தாக்குதலுக்குள்ளானால் மெக் கெய்ன் வெல்வது உறுதி எனக் கூறியது. மக்களை பயமுறுத்தி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என எதிரணி அறிக்கை விட மெக் கெய்ன் ‘அவர் அப்படி சொல்லியிருந்தாரானால் நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்’ என்று மறுதலித்துவிட்டார். ஜான் கெரிக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்குமிடையேயான போட்டியின்போது பின் லாடனின் வீடியோ செய்தி ஒன்று வெளியானது புஷ்ஷுக்கு ஆதரவாக அமைந்ததை நினைவுகூறும் ஊடகங்கள் இந்த வருடமும் அது போன்ற அக்டோபர் அதிர்ச்சி (Ocrober Surprize) வரலாம் என எதிர்பார்க்கின்றன.

அடுத்த கட்ட சுவாரஸ்யம் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவிக்கையில் வரலாம். ஒபாமா ஹில்லரியை நிராகரித்துவிட்டார் என்பதை ஊடகங்கள் கணித்துள்ளன. ஒபாமா தன் துணை அதிபர் வேட்பாளரின் பிரச்சார நடவடிக்கைகளை கவனிக்க ஹில்லரி முன்பு வெளியேற்றிய நபரை நியமித்துள்ளது இதற்கான முகாந்திரத்தை அமைத்துள்ளது.
இப்படி சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும் தேர்தல் களம் சூடில்லாமல் இருப்பதை ஒபாமாவின் ஐபாடில் என்ன பாடல்கள் இருக்கின்றன என்பதுபோன்ற செய்திகளும் மிச்செல் ஒபாமாவிற்கும் சிண்டி மெக்கெய்னுக்கும் முக்கியத்துவம் தரும் செய்திகளும் ஊடகங்களின் ‘அரசியல்’ பக்கங்களை நிரப்புவதே சொல்லிச் செல்கின்றன.

பின் குறிப்பு: ஒபாமாவின் ஐபாடில் பாப் டிலன், யோ-யோ மா, ஷெரில் க்ரோ, ஜே-ஜ்சீ, ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன், எல்டன் ஜான், ஸ்டீவி வொண்டர்ஸ் ஆகியோரின் பாடல்கள் உள்ளன.

=====
நன்றி: தமிழோவியம்

அமெரிக்க தேர்தல் – வலைப்பதிவுகளில்

1. அ.ராமசாமி எழுத்துகள்: அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

2. சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!!

3. ஊடறு: அதிகாரம் யாருக்கு…

4. பத்ரி: ஏன் பராக் ஒபாமா? – 2

5. சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் தேர்தல்

6. கீர்த்தி: இனிமேல் ஒபாமா நல்லவர்

7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்: Yes; We Can – ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர் பகுதி-1 & பகுதி-2

8. டோண்டு ராகவன்: “நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன்”

பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர்

ஆதாரம் & நன்றி: விடுதலை

அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது.

இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.

மேலும் விவரங்களுக்கு:

1. Indian American is Obama campaign senior spokesman – Politics/Nation – News – The Economic Times

2. Indian expats driving Obama’s White House bid – ExpressIndia.Com

ஒபாமா வென்றார்!!!

வரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும் பண்டிதர்களின் கூற்று ஓரளவுக்கு உண்மையானதே. இருப்பினும் அமெரிக்கா இந்தச் சிறிய தணலில் குளிர்காய முடியாது.

‘ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் முடிவை இன்னொரு (வரலாற்று சிறப்புமிக்க) பயணத்தை துவக்கி வைத்து குறிப்பிடுகிறோம். (Tonight we mark the end of one historic journey with the beginning of another) என்றார் ஒபாமா. முதல் கறுப்பின அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அந்த இரண்டாம் பயணம் அமெரிக்கர்களின் சுயசோதனைக்களமாக அமையப்போகிறது என்பது நிச்சயம். வெறும் இனத்தைத் தாண்டிச் செல்வது மட்டுமல்ல இந்த சோதனை, ஒபாமா முன்வைக்கும் புதிய அரசியலைத் தழுவிக்கொள்வதும், எட்டு இருண்ட வருடங்களின் தடங்களை அழித்துச் செல்வதும், தன்னையே புதுப்பித்துக் கொள்வதற்குமான சோதனைக் களம் இது.

ஒபாமாவின் இரண்டாவது பயணம் எளிதாக அமையப்போவதில்லை. முதுகில் கிடக்கும் ஹில்லரிச் சுமையை அவர் இறக்கி வைத்தாக வேண்டும். ஹில்லரி அரசியல் விளையாட்டின் இறுதி கட்டத்தில் பெரிதாய் பதவி பெறும் முனைப்பில் நிற்கிறார். தன் ஆதரவாளர்களைக் காட்டி ஆதாயம் தேடுகிறார். ஒபாமாவைப் பொருத்தமட்டில் ஹில்லரியின் ஆதரவு மிக முக்கியமானது அதே வேளையில் ஹில்லரியை தோளில் சுமப்பதுவும் கடினமானது. ஹில்லரிக்குத் துணை அதிபர் பதவி வழங்கப்படுமா? அல்லது சுமூகமான வேறு முடிவுகளை இரு தரப்பினரும் எட்டுவார்களா என்பதுவே அமெரிக்கத் தேர்தலின் அடுத்தக் காட்சி.

ஜான் மெக்கெய்ன் நேற்றுத் தன் பாடலை மாற்றிப் பாட ஆரம்பித்துள்ளார். ஜான் மெக்கெய்னின் தனிப்பெரும் குணாதிசயமாக அவரின் கட்சி தாண்டிய அரசியலைச் சொல்லலாம். தன் கட்சியின் நிலைப்பாடுகளை எதிர்த்து பல அரசியல் முடிவுகளையும் அவர் முன்பு எடுத்துள்ளார். ஆனால் உட்கட்சி தேர்தல்களின்போது அவரிடம் இந்தக் குணாதிசயம் துளிகூட வெளிப்படவில்லை. நேற்று உட்கட்சித் தேர்தல்கள் முடிந்தபோது கட்சிசாராத மக்களைக் கவரும்படி தன் பிரச்சாரத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் ஒபாமாவின் பிரச்சார யுக்திகளைக் கடன் வாங்கி The Change we can trust in என்பதைத் The leader we can trust in என மாற்றிக் கொண்டும், ஒபாமாவின் Change பிரச்சாரத்தை ‘நல்ல மாற்றம்’ ‘கெட்ட மாற்றம்’ என இனம்பிரித்துக் காட்டி தனித்தன்மையில்லாத ஒரு பிரச்சாரத்தை துவக்கிவைத்துள்ளார் மெக்கெய்ன்.

ஒபாமாவும் அமெரிக்காவும் நேற்று வரலாறு படைத்தன என்பதில் சந்தேகமேயில்லை. ஆயினும் இந்த சாதனை இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை. ஒபாமாவும் அமெரிக்காவும் கடக்கவேண்டிய தூரம் அதிகமில்லையென்றாலும் சில நூறாண்டு வரலாற்றைக் கடந்து அடுத்த கட்டத்தைத் தொடுவதென்பது குழந்தை பிறப்பைப் போல. வடுக்களையும் அதீத வலிகளையும் தாண்டி அந்த இன்பம் பிறக்குமா?