Boy என்றால் பையன்?

உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.

ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டமொன்றில் சாதாரண அமெரிக்க குடிமக்கள் குறித்து பேசிய பேச்சொன்றை பிடித்துக் கொண்டு அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஹில்லரிக்க்கு அவ்வப்போது வரும் ஒற்றைத் தலைவலியாக கணவர் பில் கிளிண்டன் இருந்து வருகிறார். இந்த வாரம் அம்மணி அவரை அழைத்து ‘வாயை மூடும்’ என்றே சொல்லவேண்டியதாயிற்று. போஸ்னியாவில் துப்பாக்கிச் சண்டைக்கு மத்தியில் ஓடி ஒளிந்து சென்று சேர்ந்ததாக ஹில்லரி சொன்னப் பொய் உண்மைதான் என்று பில் உளறிவிட ஹில்லரி ‘இனிமேல் போஸ்னியா குறித்து எதுவும் பேசாதே’ எனச் சொல்லிவிட்டார்.

ஒபாமா சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டத்தில் பேசும்போது சாதாரண அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து கசப்படைந்துள்ளதால்(bitter) அதை தவிர்த்து கடவுள் நம்பிக்கை, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஆகிய (முக்கியமில்லாத) பிரச்சனைகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என ஒரு உண்மையை போட்டுடைத்தார். அரசியல் தெரியாத மனிதர். இது பொதுமக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றபோதும் ஹில்லரியும் மெக்கெய்னும் இந்தக் ‘கசப்பு’ பேச்சை சர்க்கரை சேர்த்து தங்களுக்கு இனிப்பாக பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். மெக்கெய்ன் ஒபாமாவின் இந்தப் பேச்சை முன்வைத்து மின்னஞ்சல்வழியே காசு திரட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் மக்களிடம் ‘கசப்பு’ பேச்சு குறித்த கசப்பு இல்லை என்பதை ஹில்லரி இந்தப் பேச்சை எடுத்ததும் ‘பூ’ என ஊளையிட்டு எதிர்ப்பு தெரிவித்து மக்களே தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒபாமாவின் எதிரணியினரும் சில ஊடகவியலாலர்களும் ஊதிப் பெருக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரம் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்தது ரிப்பப்ளிக்கன்(குடியரசுக் கட்சி) செனெட்டர் ஜியாஃப் டேவிஸ் ஒபாமாவை ‘boy’ என அழைத்தது. அமெரிக்காவில் முன்பு கறுப்பின அடிமைகளை ‘boy’ என அழைப்பது வழக்கம். வேற்று நிற பெரியவர்களை வெள்ளையர்கள் boy என அழைத்தால் கீழானவன் என அழைப்பதாக அர்த்தம். இதற்காக டேவிஸ் நேரடியாகச் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். எனினும் பொதுவில் இப்படி பேசப்பட்டது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த வாரம் கவனிக்கத்தக்கதாக அமைந்தது டைம் பத்திரிகையும், MSNBC தொலைக்காட்சியும் ஒபாமாவின் தாய் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஒபாமாவின் ‘வெள்ளை’ பின்னணியை முன்னிறுத்த நடந்த முயற்சியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. இது ஒரு பக்கப் பார்வையேயாயினும் நிராகரிக்கப்படவேண்டியதல்ல. டைம் கவர் ஸ்டோரியாக இதை வெளியிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.

ஏப்ரல் 22 பென்சல்வேனியாவில் உட்கட்சித் தேர்தல். ஹில்லரி ஒபாமாவின் தோளிலிருந்து இறங்குவாரா அல்லது இன்னும் கொஞ்சம் ஆதரவைத் திரட்டிக்கொண்டு ஒபாமாவிற்கு உப-அதிபர் பதவியை வாக்களித்து பகடி செய்வாரா தெரியவில்லை.

McCain Chimes in on Obama’s ‘Bitter’ Comment
GOP Congressman Apologizes for Calling Obama ‘Boy’
Bill Clinton defends Bosnia remarks