அமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்தவை

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கும் பிற குடியாட்சி முறை நாடுகளில் நடக்கும் தேர்தல்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்த சிலவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

1. பிரைமரி தேர்தல்: இந்தியாவில் இருப்பவர்களுக்கு இது ஓர் அச்சரியமான விஷயம். இந்தியாவில் கட்சிகள் தனிப்பட்டவர் சொத்தாகவே உள்ளது. திமுக என்பது கருணாநிதி குடும்பச் சொத்து. அஇஅதிமுக, ஜெயலலிதாவின் சொத்து. காங்கிரஸ், சோனியாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பாஜக – ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பாதி, அத்வானிக்கு மீதி… ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என்று கட்சிகள் அனைத்துமே தனிச்சொத்தாகவே உள்ளது. (கம்யூனிஸ்டுகள் தவிர.)

அதனால் எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சியின் உரிமையாளர் தீர்மானிப்பார். பிடிக்காவிட்டால், நீங்கள் பிரிந்துபோய் வேறு கட்சி ஆரம்பிக்கலாம்! அல்லது கட்சியின் மேலிடம் கைகாட்டிய வேட்பாளரைத் தோற்கடிக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டே செய்யலாம்.

ஆனால் அமெரிக்காவில் எந்தப் பதவிக்கு யார் நிற்பது என்பதை கட்சியின் உறுப்பினர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மட்டும்தான் என்றில்லை! நான் வசித்த சின்னஞ்சிறு இத்தாகாவில் – மொத்த மக்கள் தொகை 30,000-மோ என்னவோ – மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலர் பதவிக்கும் இந்த பிரைமரி உண்டு. இதனால் நிஜமாகவே கட்சி மேலிடத்துக்கு ஜிஞ்சா போடாத, தன்மானம் உள்ளவர்கள்கூட மக்களை வசீகரித்தால் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.

என்றாவது ஒருநாள் இது இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்புவோம்.

2. எண்டார்ஸ்மெண்ட்: இந்தியாவில் நேரடியாக அரசியலில் ஈடுபடாத, ஆனால் மக்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளவர்கள் வெளிப்படையாக தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை வெளியிட மாட்டார்கள்.

மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள் என்றால்… பத்திரிகைகள், பத்தி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தொலைக்காட்சி பிரமுகர்கள், சினிமா நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் இத்யாதி, இத்யாதி. எனக்குத் தெரிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர்த்து – அதுவும் எதிர்மறையாக மட்டுமே – வேறு எந்தப் பத்திரிகையும் தலையங்கம் எழுதி ஒரு கட்சியை ஆதரித்ததாக நினைவில்லை. ஏன் ஒரு கட்சிக்கு அல்லது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தரவுகளுடன் இவர்கள் யாருமே பேசியதில்லை. தமிழகத் தேர்தல் ஒன்றில் ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாகக் காட்சி அளித்த ‘பிட்டுப் படம்’ ஒன்று மட்டும்தான் நியூட்ரல் ஆசாமி ஒருவர் கொடுத்த எண்டார்ஸ்மெண்ட்.

பொதுவாக கட்சியிலே உறுப்பினர்களாக இருக்கும் கலைஞர்கள் (நடிகர்கள், எழுத்தாளர்கள்) தங்களது ஆதரவை வெளிக்காட்டி, பிரசாரத்திலும் ஈடுபடுவார்கள். நான் அவர்களைச் சொல்லவில்லை. கட்சி சார்பற்றவர்கள், ஒரு குறிப்பிட்ட தேர்தலில் குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளர்களையோ ஆதரிக்குமாறு சொலவதைச் சொல்கிறேன்.

இது பெரிய அளவில் அமெரிக்காவில் நடக்கிறது. எண்டார்ஸ் செய்பவர்கள், பொதுவாக இவருக்கே எனது வாக்கு என்று மட்டும் சொல்லி, விட்டுவிடுவதில்லை. அதற்குமேல் சென்று, ஏன், எதற்கு என்று சொல்கிறார்கள். இது பாமரர்களுக்கு அல்லது அரசியலை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க நேரம் இல்லாதவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையக்கூடும்.

தான் ஆதரவளிக்காத ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அதனால் தனக்கு என்ன கெடுதல் ஏற்படும் என்ற பயம் இல்லாமையால்தான் இந்த எண்டார்ஸ்மெண்ட் நடக்கிறது. அந்த மாதிரியான முதிர்ச்சியான அரசியல் இந்தியாவில் இல்லை. ‘நமக்கு எதிரா நடந்துகிட்ட இவனை எப்படி டார்ச்சர் கொடுத்து அழிப்பது’ என்பதுதான் இந்திய அரசியலின் அடிநாதம். அதனாலேயே யாரும் வாய்திறந்து சில விஷயங்களைப் பேசுவதில்லை.

இனி வரும் நாள்களில் இந்த முறை மாற்றம் பெறலாம்.

9 பதில்கள்

 1. அடிப்படை இவ்வளவு ஆழமாக இருந்தும் ”ஒரு வடிகட்டின முட்டாளை’ எப்படி ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர்? அதுவும் இருமுறை? அட!, உலகமுழுதும் அவரை முட்டாள் என்று ஒப்புக்கொண்ட பிறகும் அவரை impeach பண்ணி பதவியிறக்கம் ஏன் செய்யவில்லை? தகுதியில்லாத ஒருவரை பதவியிறக்கம் செய்ய முடியாத ஜனநாயகம் எதற்கு?

 2. என்றாவது ஒருநாள் இது இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்புவோம்.

  ****

  இந்தியாவில் தற்பொழுது உள்ள நிலையில் இது நிச்சயம் ஏற்படாது. காரணம் இந்தியாவில் முதல்வர் பதவியிலோ, பிரதமர் பதவியிலோ ஒருவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே ஒருவர் தொடர்ந்து தன் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. தனக்குப் பிறகு தன் வாரிசுகளையும் வளர்க்க முடிகிறது. ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகள் தான் முதல்வர் பதவிக்காலம் என்ற நிலை இருந்தால் அடுத்த தலைவர் கட்சி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தலைமையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

  அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி காலம் ஒருவருக்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தலைமை மாறியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே ஒருவரே தனது பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது. புதியவர்கள் நுழைந்தாக வேண்டும்.

  வாரிசு அரசியல் எல்லா ஊர்களுக்கும் பொதுவானது. ஜார்ஜ் புஷ், ஹில்லாரி கிளிண்டன் எல்லாம் வாரிசுகள் தானே. கடந்த 25 ஆண்டுகளில் புஷ், கிளிண்டன் குடும்பம் இல்லாத ஒரு ஜனாதிபதி தேர்தல் நடந்ததில்லை என்ற எரிச்சல் இப்பொழுது வெளிப்படையாக உள்ளது.

  எந்த சாமானியரும் “திறமை” இருந்தால் இங்கு ஜனாதிபதி தேர்தல் வரை கூட போட்டியிடுவது எனக்கும் பிடித்த ஒன்று. ஒபாமா என்ற பெயர் 2004வரை யாருக்கும் தேசிய அளவில் தெரியாது. ஆனால் 2008ல் அவர் ஜனாதிபதியாக கூட மாற முடியும் என்பதே இங்கே உள்ள ஜனநாயகத்திற்கும், நம்மூர் ஜனநாயகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவுபடுத்துகிறது.

  நம்மூரில் ஜனநாயக மன்னராட்சி தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் அல்ல.

  ****

  உட்கட்சி தேர்தல் நம்மூரில் எனக்கு தெரிந்து திமுகவில் மட்டும் தான் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கிளை, நகரம், மாவட்டம் போன்றவற்றில் உண்மையிலேயே திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. பணம் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விடயம். என்றாலும், மாவட்டத்தில் வென்றால் மாநில அமைச்சர்/எம்.பி ஆக முடியும். மாநில அரசியல் தான் தேர்தல் என்ற பெயரில் அதே தலைவர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டே உள்ளது.

 3. //என்றாவது ஒருநாள் இது இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்புவோம்….
  ………………….

  இனி வரும் நாள்களில் இந்த முறை மாற்றம் பெறலாம்.

  //

  இப்படி நம்மல நாமே ஏமாதிக்க வேண்டியதுதான்..

  இப்ப இருக்கிற ‘தலைவரு’ங்க கிட்ட அப்படி ஒரு ‘vision’ இல்ல… வரப் போற (ஸ்டாலின், கனிமொழி, ராகுல்….??) வுங்ககிட்டயும் அப்படி ஒரு திட்டம் இல்லை… இதில எங்க இருந்து நம்புறது..சொல்லுங்க…

  சசி சொன்ன மாதிரிதான்…. பதிவிக்காக நம்ம என்னனாலும் பண்ணுவோம்… ;(

  ஒண்ணு பண்ணலாம்… நம்ம அரசியல்வாதிகள இங்க வந்து (வேடிக்கை) பார்க்க சொல்லலாம்.. என்ன பிரச்சனை… இவுங்களையும் கெடுத்துறகூடாது…. 😉

  நாமபோக வேண்டிய தூரம் ரொம்ப… ரொம்பவே இருக்கு… கண்ணுக்கெட்டியவரை இருக்கிறமாதிரி தெரியலை….

 4. சவுந்தரராஜன்: எந்த ஓர் அமைப்பிலும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். ‘வடிகட்டின முட்டாள்’ என்றாலும் புஷ் பின்னேதான் ரிபப்ளிகன் கட்சி நின்றது. அவரை எதிர்த்து நின்றவர்களால் வேண்டிய அளவு வாக்குகளை பிரைமரியில் பெறமுடியவில்லை. அது வலுவான வேட்பாளர் இல்லாமையைக் குறிக்கிறது. புஷ்-கோர் தேர்தல் மிகவும் கடுமையாகப் போட்டியிட்ட தேர்தல். ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் கவர்னராக இருந்த ஃபுளோரிடா மாகாணத்தில் நடந்த தேர்தல் தில்லுமுல்லுகள் நீதிமன்றம்வரை சென்று கடைசியாக ஜார்ஜ் புஷ் வெற்றிபெற்றார். அதைவிட விவாதத்துக்குரிய தேர்தல் அமெரிக்காவில் நடைபெற்றதில்லை.

  அடுத்து நடந்த புஷ்-கெர்ரி தேர்தலிலும் புஷ் மிக நெருங்கிய வித்தியாசத்திலேயே வென்றார். அதற்குள் 9/11 நடந்திருந்தது. ஈராக், ஆஃப்கனிஸ்தான் போர்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சதாம் ஹுசைன் பிடிக்கப்படவில்லை. அப்படியும்கூட புஷ் அணியால் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது.

  இந்தமுறை எது எப்படியானாலும் ரிபப்ளிகன் கட்சியால் வெல்லமுடியாது என்றே தோன்றுகிறது.

  தகுதியில்லாதவரை பதவி இழக்கச் செய்யமுடியாதது ஒரு ஜனநாயகமா – என்ற கேள்வி சரியில்லை. ஒரு குடியரசுத் தலைவரை பதவி இழக்கச் செய்ய குறிப்பிட்ட வரைமுறைகள் உள்ளன. அதில் ஜார்ஜ் புஷ் மாட்டவில்லை. பில் கிளிண்டன் கிட்டத்தட்ட மாட்டினார். எனவே ஏன் புஷ்ஷை இம்பீச் செய்யவில்லை என்று கேட்பது நியாயமல்ல. அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கக்கூடாது. விதிவசத்தாலும் தில்லுமுல்லுகளாலும் முதல்முறையும் சண்டையையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் காரணம் காட்டி இரண்டாம் முறையும் வென்றார்.

 5. ”இப்படி நம்மல நாமே ஏமாதிக்க வேண்டியதுதான்..”

  தென்றல்: நான் என்னை ஏமாற்றிக்கொள்வதாக நினைக்கவில்லை. ஆப்டிமிசம் இல்லாமல் இந்தியாவில் யாரும் வாழமுடியாது. கடந்த பல வருடங்களில் பல துறைகளில் இந்தியாவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே அரசியலிலும் நடக்கும். அது என் கருத்து. பெஸ்ஸிமிஸ்டிக்காக நீங்கள் இருக்க நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

  அமெரிக்க அரசியல் எப்படி புழுத்து நாறியிருந்தது என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அமெரிக்க அரசியல் வரலாற்றைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள். கள்ள வாக்குகள், சாராயம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, நீதித்துறையில் மலிந்துகிடந்த ஊழல் என்று அத்தனை வண்டவாளங்களும் வெளியே வரும். அத்தனையையும் மீறி இன்று ஓரளவுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல் முறையை அமெரிக்கர்கள் தங்களுக்கென உருவாக்கியுள்ளனர்.

  இந்தியர்களாலும் அதனைச் செய்யமுடியும். இன்னும் 50-100 வருடங்கள் ஆகும் என்றால் ஆகிவிட்டுப் போகட்டும். ஒரு நாட்டின் ஆயுள் காலத்துடன் ஒப்பிடும்போது ஒரு மனிதனின் ஆயுள் காலம் மிகச் சிறிது.

 6. சசி: பிரிட்டனில்கூட இந்தியாவில் இருப்பதைப்போன்ற ‘காலவரம்பற்ற’ பதவி வகிக்கலாம். ஆனால் அங்கு கட்சி ஒருவர் தனிச்சொத்தாக இருப்பதில்லையே?

  எனவே இந்தியாவிலும் சில மாற்றங்கள் அடுத்த சில வருடங்களில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

  உட்கட்சித் தேர்தல் என்பது கட்சிப் பதவிகளுக்கு மட்டும்தானே? திமுகவும்கூட ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளரை தங்களது உறுப்பினர்களைக் கொண்டு பிரைமரி தேர்தல்மூலம் நடத்தினால் இந்தியக் கட்சிகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும். ஆனால் தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு என்பதே தேர்தல் பிரசாரத்துக்கு ஒருநாள் முன்புதான் முடிவாகிறது என்னும்போது இது அவ்வளவு சாத்தியமானதல்ல – இப்போதைக்கு.

 7. சசி…
  —அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி காலம் ஒருவருக்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே.—

  தொடர்புடைய சுவாரசியங்கள்:
  1. Presidential Term Limits — Infoplease.com

  2. I know that a president cannot serve more than two terms, but can a vice president serve more than two? – Yahoo! Answers

 8. —சாராயம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது—

  தொடர்புடைய நிகழ்வு:
  William Henry Harrison, Martin Van Buren, and the Birth of the Modern Political Campaign – US News and World Report: “One Philadelphia distiller, E. C. Booz, started selling whiskey in bottles shaped like log cabins; ‘booze’ has been synonymous with liquor ever since.”

 9. —இதனால் நிஜமாகவே கட்சி மேலிடத்துக்கு ஜிஞ்சா போடாத, தன்மானம் உள்ளவர்கள்கூட மக்களை வசீகரித்தால் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.—

  உண்மைதான். என்றாலும், பெரிய பதவிகளில் இது நடப்பதில்லை…

  விளக்க கட்டுரை:
  Z Magazine – Hidden Primaries By Laurence Shoup: “Ruling class conducts its hidden primary”
  ———————-

  —ஒருவரே தனது பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது. புதியவர்கள் நுழைந்தாக வேண்டும்.—

  சசி சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

  காங்கிரஸ், செனேட் ஆகிய எம்.எல்.ஏ, எம்.பி இடங்களுக்கு இந்த காலக்கெடு கிடையாது. ஒரு தடவை ஜெயித்து விட்டால், சாகும் வர செனேட் இருப்பிடம் ‘அவருக்கே அவருக்காக’ நிரந்தரமாக வாய்க்கப் பெறுகிறது.

  கட்சி மாறினாலும் ஜான் லீபர்மேன் இன்னும் வெற்றிகளைப் பெறுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் தோற்றாலும், ஜான் கெர்ரி செனேட் சீட்டை விடாப்பிடியாக வைத்துக் கொன்டிருக்கிறார். மெகெயின், டெட் கென்னடி என்று எல்லாருமே கிழடுகள்தான்.

  உள்ளூர் மாகாணத் தேர்தல்களிலும் இதே நிலைதான். ஆளுநர் பதவிக்கு மட்டும்தான் எட்டாண்டு நிபந்தனை. மற்ற தேர்தல்களில் வாரிசு அரசியலும் பிரமாதமாக அரங்கேறுகிறது; நிரந்தர வேட்பாளர் என்பதும் தொடர்கிறது.

  கடந்த ஆண்டு, மாஸசூஸட்சில் எம்.எல்.ஏ ஒருவருக்கு பல்கலை. துணை வேந்தராகும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய இருப்பிடத்தை ராஜினாமா செய்தார். இதனால் காலியான சீட்டுக்கு நடந்த ஜனநாயக ப்ரைமரித் தேர்தலில் பல உருப்படியானவர்கள் போட்டியிட்டாலும், அரசியல்வாதிபால் சோன்காசின் மனைவி என்ற காரணத்தினாலேயே நிக்கி சோன்காஸ் மிக எளிதிl வென்றார்.

  இவரிடம் பெரும் நிதி இருந்தது மற்றொரு முக்கிய காரணம்.

  அதையும் மீறி ஒபாமா மாதிரி வேட்பாளர்கள் வந்துவிடுவதும் நிகழ்த்தான் செய்கிறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: